
9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேனியல் கிறிஸ்டியன் இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாட வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆஸ்திரேலியா அணி தற்போது மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. இருந்தாலும் ஐசிசி தொடரின் போது எப்போதுமே ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த அணியாக செயல்படுகிறது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்களுடைய அணி அற்புதமான ஆட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இனி வரும் போட்டிகளில் எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். தற்போதைக்கு ஆஸ்திரேலியா விளையாடி வரும் ஆட்டத்தை பார்க்கும் போது நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தான் விளையாடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.