
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினசரி மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக சிறுமி வீட்டிற்கு சென்றார். அப்போது சந்திரசேகர் என்ற கூலித்தொழிலாளி அங்கு வந்தார். அவர் சிறுமியை வழிமறித்து சாக்லேட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் கதவை திறக்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். அதன் பிறகு சந்திரசேகரையும் அவர்கள் கைது செய்தனர். அப்போது கிராம மக்கள் அவரை அடிக்க முயன்ற நிலையில் போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்று விட்டனர். மேலும் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.