ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக பேசியுள்ளார். இதேபோன்று கடந்த 2-ம் தேதி அந்த மாணவியிடம் சாக்லேட் தருவதாக கூறி அறைக்கு அழைத்துள்ளார். அதன் பின் அங்கு சென்ற சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்க்கு சென்ற சிறுமியின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரின் பெற்றோர் கேட்டபோது மாணவி நடந்த சம்பவத்தை கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆஞ்சநேயலு கவுட்டை கைது செய்தனர். பின் அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோன்று அவர் சாக்லேட் தருவதாக கூறி பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கைதான ஹெச்எம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளியின் லைசென்ஸை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 2-ம் தேதி மகளிரமைப்பினர்  போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.