கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அரசம்பாளையம் பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கணக்கினத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(55) என்பவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பூபேஸ்(18) என்பவரும் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவைபுதுரை சேர்ந்த காண்ட்ராக்டர் மணிமுத்து என்பவர் கேட் அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேட் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் கீழே அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரன் மற்றும் பூபேஸ் இருவரின் மீதும் கேட் சரிந்து விழுந்ததில் இருவரும் கேட்டின் உள்ளே நசுங்கி மாட்டிக்கொண்டனர். மேலும் அருகில் நின்று கொண்டிருந்த கான்ட்ராக்டரின் காலிலும் கேட் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மகேந்திரன் மற்றும் பூபேஸை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த மணிமுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.