திமுக பிரச்சார மேடையில் பேசிய நடிகை ஆர்த்தி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் டான்ஸர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறிய அவர், சட்டமன்றம் என்பது மக்கள் பணி செய்யும் இடமே தவிர டான்ஸ் ஆடும் இடமல்ல என்று கிண்டலாகச் சாடினார். “அவர் போடும் டியூனுக்கெல்லாம் நம்மால் ஆட முடியாது, நம் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிடக் கூடாது இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய ஆர்த்தி, சினிமா வேறு அரசியல் வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்று பொளேர் எனப் பேசினார்.
சினிமா என்பது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் வேலை, ஆனால் அரசியல் என்பது 24 மணி நேர மக்கள் பணி என்று குறிப்பிட்ட அவர், நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு நாளைக்கே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருப்பதாக விமர்சித்தார். சினிமா பாணியிலேயே அரசியலையும் செய்துவிடலாம் என்று அவர் நினைப்பது மிகப்பெரிய தவறு என்று ஆர்த்தி பேசிய வீடியோ, தற்போது அரசியல் வட்டாரத்திலும் விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
