தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு பின்னால் வசித்து வருபவர் குமார். முருகன் வீட்டில் உள்ள கோழி அவ்வப்போது குமார் வீட்டிற்கு சென்று விடுவதால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள் எப்போதும் போல் முருகன் வீட்டு கோழி குமார் வீட்டிற்கு சென்று விட அதை பிடித்து வைத்துக்கொண்ட குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முருகனிடம் சென்று தகராறு செய்தனர்.

இதனால் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்து கோபம் அடைந்த குமார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் முருகன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு முருகனை கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த முருகனின் மைத்துனரான வேல்சாமி இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போது குமார் மற்றும் குடும்பத்தினர் அவரை கீழே தள்ளிவிட்டனர்.

கீழே விழுந்த வேல்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.