மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் வகை சாத்திய கூறையும் கண்டறியும் 547 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஆர்.டி.பி.சி சோதனை ஆய்வின் மூலமாக சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் டேக் பாத் ஆர்டிபிசி உபகரணங்களின் மூலம் புதிய வகை பாதிப்புகள் இருக்கிறதா என்பதன் முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். அதே போல் தீ நூண்மிக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகி உள்ளதா என்பதை துரித பரிசோதனை உபகரணங்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்களை உற்பத்தி செய்யவும் அதனை விற்பனை செய்வதற்கும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது. அதில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. இதனை தர பரிசோதனை செய்த மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக சில உபகரணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் 275 துரித பரிசோதனை உபகரணங்கள், 272 பி.சி.ஆர் உபகரணங்கள் என மொத்தம் 547 உபகரணங்களை பயன்படுத்த இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.