கொரோனா வைரஸ் பரவலை 99 சதவீதம் தடுக்கும் எலக்ட்ரானிக் முக கவசத்தை முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் அவருடைய மனைவி கனக லதாவும் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். இவர்கள் கனடாவில் நிலவும் உறை பனி காலத்தின் போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார்கள்.

இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால் அதை தடுக்கும் விதமாக எலக்ட்ரானிக் முக கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த முக கவசத்தை ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொடுத்தனர். இந்த ஆய்வின் போது 98.7 சதவீதம் வைரஸ் உள்ளே செல்வது முக கவசத்தின் மூலம் தடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதன் பிறகு இந்த முக கவசம் 100 சதவீதம் விமானப்படை மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முககவசம் லித்தியம் பேட்டரி மூலம் ஹை வோல்டேஜ் திறனுடன் செயல்பட்டு காற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கிறது. இந்த முககவசத்தை தயார் செய்வதற்கு 10,000 ரூபாய் செலவாகும் நிலையில், 2 மணி நேரம் அதை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முக வசத்தை மொத்தமாக தயாரிக்கும் போது செலவு குறையும் என்று கர்னல் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் இந்த முக கவசத்தை பதிவு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.