சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பான முறையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சிறப்பான பணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை, CMRTS, வெளிவட்ட சாலை, மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்றவைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இது தவிர சென்னையில் உள்ள ஏரிகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை புறநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள 10 ஏரிகளில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி ஏரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, ஏரி நீரில் குப்பைகள் கலக்காமலும் பாதுகாக்கப்படும். இந்நிலையில் கொளத்தூர், புழல், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அயனம்பாக்கம், செம்பாக்கம், மாதம்பாக்கம், முடிச்சூர், ரெட்டேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனையடுத்து ஆகாய தாமரைகள் தூர்வாரப்பட்டு நாட்டு தாவரங்கள் வளர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, ஏரிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, இருக்கை வசதிகள், இயற்கை விளக்க மையங்கள், பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். அதோடு பொழுதுபோக்கு வசதிக்காக படகு போக்குவரத்து, பட்டாம்பூச்சி இல்லங்கள், மலர் தோட்டங்கள் போன்றவைகளும் உருவாக்கப்படும். மேலும் இவற்றை பராமரிப்பதற்காக வாடகை முறையில் கட்டணம் வசூலிப்பதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.