கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ  முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இரவு விக்னேஸ்வரன் தனது நண்பனை பார்க்க பைக்கில் பிள்ளையார்மேட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த விக்னேஸ்வரன் மீது அறுந்த நிலையில்  தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.