
தாராபுரத்தில் காதல் மனைவியை கொலை செய்து தலைமறைவாக இருந்த கணவர் சுரேஷ் ஷா, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பீகாரை சேர்ந்தவர் சுரேஷ் ஷா (45), 2007ல் திருப்பூரில் குடியேறி ஸ்வீட் கடையில் வேலை செய்தார். அப்போது, திருநெல்வேலியை சேர்ந்த செல்வியை காதலித்து திருமணம் செய்து தாராபுரத்தில் வாழ்ந்தார். இருவரும் பஸ் ஸ்டாண்ட் அருகே பானி பூரி வியாபாரம் செய்து வந்தனர்.
கடந்த 2013ல் மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு சுரேஷ் ஷா, செல்வியை அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாகிய நிலையில், தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் எஸ்.பி. அபிஷேக் குப்தாவின் உத்தரவின் படி, தனிப்படை போலீசார் பீகாருக்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, டில்லியில் பதுங்கியிருந்த சுரேஷ் ஷாவை போலீசார் கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.