ஆட்கடத்தல், மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி இந்தியாவில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகிப் பல நாடுகளைக் கடந்து வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தற்போது தான் உருவாக்கியதாகக் கூறப்படும் ‘கைலாசா’ நாட்டின் உண்மையான முகவரியை முதன்முறையாகப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இருந்தால் சிறைவாசம் உறுதி என்பதால் வெளிநாட்டிற்குத் தப்பியோடிய அவர், பல ஆண்டுகளாகப் பல இடங்களிலிருந்து கிராஃபிக்ஸ் மற்றும் செட்டிங்குகள் மூலம் யூடியூப் நேரலைகளில் பேசி வந்தார்.

தான் புதிதாக ‘கைலாசா’ என்ற தனி நாட்டைத் தோற்றுவித்துவிட்டதாகவும், அதற்குத் தானே அதிபராக இருப்பதாகவும் அறிவித்த அவர், அமைச்சரவை பெயர்கள், தனி வங்கி மற்றும் தனி நாணயங்கள் போன்ற பல்வேறு விதமான விசித்திர அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அந்த நாடு உலகின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் அவர் இதுவரை வெளிப்படுத்தாமல் மர்மமாகவே வைத்து வந்தார்.

தற்போது பல ஆண்டுகள் கடந்த நிலையில், தனது கைலாசா நாடு மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரத்தில் உள்ள கினியா பிசாவ் பகுதியில் அமைந்துள்ளதாக அவர் தனது புதிய வீடியோ மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். பலரும் பொய்யாகப் கிண்டலடித்து வந்த கைலாசா நாட்டின் முகவரி தற்போது ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிட்டு வீடியோவாக வெளியாகியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.