கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மாணவி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்க அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திய பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தரமற்ற உணவினால் மற்றொரு மாணவி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளதோடு, இந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.