உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கணவரின் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மனைவி மற்றும் மாமனாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது ஆக்ராவைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரின் மனைவி தானுவுக்கு கடந்த நவம்பர் 22-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக ஜிதேந்திரா தனது மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்கு குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடிய பிறகு, அனைவரும் இரவு உணவு உண்டு உறங்கச் சென்றனர். ஆனால், அதிகாலை 3 மணியளவில் ஜிதேந்திராவுக்குத் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இது சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஜிதேந்திராவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடியதையடுத்து, வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதனால் ஜிதேந்திரா தனது மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது.
தடயவியல் ஆய்வக அறிக்கையில், ஜிதேந்திரா அன்று இரவு அருந்திய மதுவில் ‘சல்பாஸ்’ (Sulphas) என்ற கொடிய விஷம் கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைக் கொண்டு போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜிதேந்திராவின் மாமனார் மகேந்திரா உண்மையை ஒப்புக்கொண்டார். தனது மகளுடன் ஜிதேந்திரா அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட தானுவும் அவரது தந்தை மகேந்திராவும் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியது அம்பலமானது.
மேலும் இதையடுத்து, கொலையாளிகளான மனைவி தானு மற்றும் மாமனார் மகேந்திராவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறந்தநாள் கொண்டாட்டமே ஒருவரின் மரண நாளாக மாறிய இச்சம்பவம் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
