
ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை இல்லாததை பற்றி பேசி புலம்பி அழுதுள்ளார். சம்பவம் நடந்த அன்று மாதேஸ்வரனின் சகோதரர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கதவைத் தட்டிய அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது மாதேஸ்வரனும், கீதாவும் வீட்டினுள் சடலமாக கிடந்தனர். அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரனின் சகோதரர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இருவரும் குழந்தை இல்லாத காரணத்தினால் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.