திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தூய்மை பணியாளர் விவகாரத்தில் திமுக அரசையும், விசிக தலைவருமான திருமாவளவனையும் கடுமையாக விமர்சித்தார்.

“தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது திமுக அரசு. திமுக செய்கிற பாவ மூட்டையை திருமாவளவன் சுமக்கிறார். திமுக சொல்லும் விஷயங்களை திருமாவளவன் அறிக்கையாக வெளியிடுகிறார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, தூய்மை பணியாளர் விவகாரத்தில் திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், சமூக நீதி குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது: “தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதே சமூக நீதி அல்ல; குப்பை அள்ளும் தொழிலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதே உண்மையான சமூக நீதி.

‘நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள்’ என்று கூறுவது எப்படிச் சரியாக இருக்கும்? பணி நிரந்தரம் என்பது குப்பை அள்ளுபவனே தொடர்ந்து அள்ளட்டும் என்பதற்கே வலுசேர்ப்பதாகும். குப்பை அள்ளும் தொழிலிலிருந்து அவர்கள் பிள்ளைகள் விடுபட வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம்” என்றார்.

மேலும், “தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து புரிதல் இல்லாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். குப்பை அள்ளுபவனின் பிள்ளை குப்பை அள்ள வேண்டுமா? தலித் பிரச்சனை என்றால் திருமாவளவன் மட்டுமே பேச வேண்டும் என சொல்வதே சாதி மனப்போக்கு. தலித் பிரச்சனை குறித்து அதிமுக பேசக்கூடாதா? அவர்களுக்கு அதில் பொறுப்பு இல்லையா?” என்று கடுமையாகக் கேட்டார்.

சமீப காலமாக அதிமுகவும், விடுதலை சிறுத்தைகளும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.