தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், மத்திய அரசு Group C மற்றும் வர்த்தமானியில் பதிவு செய்யப்படாத Group B பிரிவில் உள்ள ஊழியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான 30 நாள் சம்பளத்திற்கு சமமான “தற்காலிக போனஸ்” பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை அதிகபட்சமாக ரூ.6,908 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்பதும், மார்ச் 31, 2025 வரை பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் முழு வருடமும் வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில் விகிதாசாரமாக போனஸ் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் சில நாட்கள் மட்டுமே பணியாற்றிய காலநியமன ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வந்துள்ள இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி, பண்டிகைக் கால செலவுகளை எளிதாக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.