
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த நிலையில் ஏராளமானோர் போட்டியை கண்டு களித்தனர்.அந்த வகையில் கார்த்திக் போட்டியை காண சென்ற நிலையில் தன்னுடைய நண்பர்கள் விளையாடும் அணியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
இறுதியில் அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த அணி வெற்றி பெற்றது. இதனால் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மைதானத்தில் ஓடி வந்து தன்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார். அவர் கத்தி கூச்சலிட்டபடியே மைதானத்தை சுற்றி வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து நண்பர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.