நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்..

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் குடியரசுத் தலைவர். தொலைநோக்கி சிந்தனையுடன் குடியரசுத் தலைவர் உரையை வழங்கியிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரை நாட்டுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. 140 கோடி மக்களும் குடியரசுத் தலைவர் உரையை வரவேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரையில் உள்ள முக்கிய அம்சங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்றார்.

மேலும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவரை அவமானம் செய்தார். காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களை சுடும். எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர். ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் சிலரது (ராகுல் காந்தி) பேச்சால் அவர்களது ஆதரவாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து இருப்பதாக பிரதமர் விமர்சித்தார். உள்மனதில் இருந்த வெறுப்பு அவர்களது பேச்சு மூலம் வெளிப்பட்டிருப்பதாக ராகுல் குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். அதாவது, இல்லாத விஷயத்தை ராகுல் காந்தி பேசி இருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்..

தொடர்ந்து அவர், கொரோனா தொற்று பாதித்த போதிலும் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறது. நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது. உலகின் மிகப் பெரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது இந்தியா. பிற நாடுகள் நம்மை நேர்மறை சிந்தனை உடன் பார்க்கின்றன.

ஜி 20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் உரையிலுள்ள முக்கிய அம்சங்களை யாரும் எதிர்க்கவில்லை
கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி இந்தியா சாதித்தது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் நம் தேசத்தில் உடனடியாக கிடைக்கின்றன. பெருந்தொற்றுப் போன்ற அனைத்தையும் தாண்டி நம் நாடு முன்னேறி வருகிறது என்றார்.

மேலும் டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. விநியோக சங்கிலி மூலம் கொரோனா தடுப்பு மருந்தை உலகமெங்கும் கொண்டு சேர்த்தோம். டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன. இந்தியா உற்பத்தி நாடாக மாறிக்கொண்டிருப்பதை உலக நாடுகள் கண்டு கொண்டிருக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது. இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்கள் முதல் காஷ்மீர் வரை எந்த ஒரு நக்சல் நடவடிக்கையும் கிடையாது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்… மேலும் குட்டி கதை ஒன்றை உதாரணம் காட்டி பிரதமர் மோடி பேசினார்.. இதனால் மக்களவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதனிடையே பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். அதானி விவகாரம் குறித்து கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி எதிர் கட்சிகள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தது.