’லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பலரைச் சிரிக்க வைத்த நடிகர் சிரிக்கோ உதயா, தற்போது சர்க்கரை நோயின் பாதிப்பால் தனது இடது காலை இழந்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்குத் திரைத்துறையினர் சிலர் உதவி செய்து வந்தனர். தற்போது வீடு திரும்பியுள்ள அவர், ஒரு பேட்டியில் தனது கஷ்டமான காலத்திலும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, நடிகர் சந்தானம் குறித்து அவர் பேசுகையில், லொள்ளு சபா காலத்தில் சந்தானம் தன்னை அண்ணன் என்று அழைத்து, “நாங்கள் பெரிய ஆளானதும் உங்களை எங்களுடனே வைத்துக்கொள்வோம்” என்று கூறியதை நினைவுகூர்ந்தார். ஒருமுறை சந்தானம் போன் செய்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் ஒரு நோயாளி வேடம் இருப்பதாகவும், ₹750 சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார்.
உதயா அங்கே சென்று நீண்ட நேரம் வசனம் பேசி நடித்தார். ஆனால், படம் ரிலீஸ் ஆனபோது அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, ஒரே ஒரு வரி மட்டுமே படத்தில் வந்தது. தனது தற்போதைய உடல்நிலை பாதிப்பையும் மறந்து, அந்தப் பழைய சம்பவத்தைச் சிரித்தபடியே உதயா பகிர்ந்துகொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.
