
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் காரில் உள்ள ஐந்து பேரும் அவசர அவசரமாக கீழே இறங்கி தீக்காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காரில் பயணித்தவர்கள் கொண்டு வந்த 12 லட்ச ரூபாய் சீட்டு பணம் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.