
புதுக்கோட்டை மாவட்டம் துக்கோட்டை அருகே மழையூரில் டாஸ்மாக் கடை அருகே நடந்த இளைஞர் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன் (20) என்பவர், தன்னுடைய வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
அங்கிருந்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உறவினர்கள் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூடி வைத்துள்ளதையும், அந்தக் கடையை மூடக்கோரி உள்ளூரின் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பதற்றம் அதிகரிக்க, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
முருகேசன் கொலை வழக்கில் பழைய காதல் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் முருகேசனின் உறவுக்கார பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து அவருடன் சென்றார்.
அந்த காதலனுக்கும் முருகேசன் குடும்பத்திற்கும் இடையே பகை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பழிவாங்கும் நோக்கில் கூலிக்கும்பலை பயன்படுத்தி இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
தற்போது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்; மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.