பெங்களூருவில் ஜோதிடர் ஒருவர் “ஆயுட்காலம் குறைவு” என்று கூறியதைக் கேட்டு மனமுடைந்த பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  வித்யா ஜோதி (29) என்பவர் கணினி பொறியாளர். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். வித்யா ஜோதியும், இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்காக ஜாதகம் பார்த்தபோது, ஜோதிடர் ஒருவர் வித்யா ஜோதிக்கு “ஆயுட்காலம் குறைவு” என்று அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார். மேலும், இந்த தோஷத்தைப் போக்க ‘மாரம்மா தேவி’க்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மகளின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பெற்றோர், ஜோதிடர் கூறியபடி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். ஒன்பது நாட்களும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஆனால், தான் விரைவில் இறந்துவிடுவோம் என்பதால்தான் குடும்பத்தினர் தனது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் என்றும், இந்தப் பூஜைகள் தனக்காகவே நடத்தப்படுகின்றன என்றும் வித்யா ஜோதி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பூஜையின் இறுதி நாளான 9-வது நாளில், மாரம்மா தேவிக்குத் தாலியைக் காணிக்கையாக வழங்க ஜோதிடர் கூறியுள்ளார். அதன்படி வித்யா ஜோதி தாலியைக் காணிக்கையாக வழங்கி பூஜையை முடித்துள்ளார்.

பூஜைகள் முடிந்த அன்று இரவு அனைவரும் உறங்கச் சென்றனர். மறுநாள் காலை வித்யா ஜோதி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, வித்யா ஜோதி தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிடரின் வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்தத் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.