சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தவர் கென்யாவைச் சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29). 2021ஆம் ஆண்டு சேலத்திற்கு வந்த இவர், பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

இவருடன் உகாண்டா நாட்டைச் சேர்ந்த நபுகீரா ஹெலன் (33) என்பவரும் தங்கியிருந்தார். ஹெலன் புதுச்சேரியில் கல்வி பயின்றுவரும் நிலையில், அவரது அதிக நேரம் டேனியலுடன் தான் கழிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி இருவரும் மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்தனர். அப்போது டேனியல், மாடியின் சுவரில் அமர்ந்திருந்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். காதலி ஹெலன் கதறிக்கொண்டு ஓடி வந்து அவரை தூக்கினார்.

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்  உடனடியாக டேனியலுக்கு உதவி செய்து, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலை, இடுப்பு, மற்றும் கால்களில் தீவிர காயங்கள் ஏற்பட்டிருந்தது.

கன்னங்குறிச்சி போலீசார் விசாரணையில், டேனியல் தனது காதலியுடன் இருந்ததாகவும், தகராறு எதுவும் இல்லையெனவும், விபத்து காரணமாக விழுந்ததாகவும் கூறினார். இருந்தும், சிகிச்சை பலனின்றி கடந்த முன்தினம் டேனியல் உயிரிழந்தார்.

அவரது மரணத்தை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவர் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.