சத்தீஸ்கர் மாநிலத்தின் சுர்குஜா மாவட்டம் மாயாபூரில், 5 மாத கர்ப்பமாக இருந்த 22 வயது பெண் ஒருவரை அவரது காதலன் கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள வற்புறுத்தியதால் அதன்  காரணமாக அந்தப் பெண் உயிரிழந்தார் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த கோலு என்ற இளைஞருடன், பெண் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. உடல்நிலை மோசமான நிலையில், அவரை அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காதலன், நிலைமை கவலைக்கிடமானதாக மாறியதும், தாய் மாமாவுடன் சேர்ந்து மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணின் தாயார், கோலு தனது மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும், அதனால் அவளுக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கோலுவும் அவரது தாய் மாமாவும் சேர்ந்து, அவரது மகளை அடித்து, கருக்கலைக்கச் செய்ததாகவும் கூறினார். இந்தக் கருக்கலைப்பின் பின் ஏற்பட்ட உடல் பாதிப்பு காரணமாக அவரது மகள் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார். சம்பவத்தன்று அவருடன் வந்திருந்த அவரது தங்கை மட்டும் மருத்துவமனையில் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி சுர்குஜா மாவட்ட கூடுதல் எஸ்பி அமோலக் சிங் தெரிவித்ததாவது, இந்த வழக்கில் இறந்த பெண்ணின் தாயாரிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீதுமேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் கோலு மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.