மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் சோனியா எனப்படும் புனியா பைராகி 32 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர் பாபு பைராகி (35) என்பவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சோனியாவின் முன்னாள் கணவரான ராஜூ யாதவ் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் பாபுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த கொலைக்குப் பிறகு போலீசார் ராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சோனியா கடும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள தன் தாய் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

அவர் செல்வதற்கு முன்பாக தன்னுடைய முன்னாள் கணவனை சிறைக்கு சென்று சந்திக்க விரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மன அழுத்தத்தில் இருந்த சோனியா ஊருக்கு கிளம்புவதாக இருந்த நிலையில் திடீரென தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை பக்கத்து வீட்டினர் சோனியா தூக்கில் தொங்குவதை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோனியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.