அமெரிக்காவில் 1970-களில் அமானுஷ்ய சம்பவங்களை ஆராய்ந்த வாரன் தம்பதியினர், பல பேய் சம்பவங்களை நேரில் கையாண்டு ஹாலிவுட் சினிமாவுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கினர். இவர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கான்ஜூரிங், அன்னாபெல், நன் போன்ற ஹாரர் படங்கள் உருவாக்கப்பட்டன.

இதில் முக்கிய பங்கு வகித்தது ‘அன்னாபெல்’ என அழைக்கப்படும் ஒரு பொம்மை. உண்மையில், இது ‘ராகெடி ஆன்’ என்ற துணி பொம்மை ஆகும். சிவப்பு முடி, பட்டன் கண்கள், மூக்கு ஆகிய தனித்துவ அம்சங்களைக் கொண்ட இந்த பொம்மைக்குள் ‘அன்னாபெல்’ என்ற சிறுமியின் ஆவி இருக்கிறது என வாரன் தம்பதியினர் கூறினர். அந்த பொம்மை தற்போது ‘வாரன்ஸ் அக்கல்ட்’ என்ற அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சமீபமாக, இந்த பொம்மையை அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக லூசியானா மாகாணத்தில் ‘அன்னாபெல்’ காட்சிக்கு வைக்கப்பட்டபோது, அந்த மாகாணத்தின் நோட்டாவே ரிசார்ட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில், “அன்னாபெல் பொம்மையை அங்கு கொண்டு வந்ததே தீ விபத்திற்கு காரணம்” என பலரும் பதிவிடத் தொடங்கினர். எனினும், அதிகாரிகள் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும், இது வெறும் நம்பிக்கையே எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

தீ விபத்துக்குப் பிறகு அன்னாபெல் பொம்மை திடீரென காணாமல் போனதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இதனால் லூசியானா மக்களில் பெரும் அச்சம் ஏற்பட்டது. “என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை”, “இந்த பேய் பொம்மையை நாடு முழுவதும் ஏன் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்?” என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய இந்த வதந்தி, அன்னாபெல் தொடர்பான மர்மங்களை மீண்டும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா ஒரு வீடியோவின் மூலம் இதற்கு பதிலளித்துள்ளார். அதில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக உள்ள அன்னாபெல் பொம்மையை காட்டி, “அன்னாபெல் எங்கும் போகவில்லை.

அவள் பத்திரமாக இருக்கிறாள். அக்.4-ந்தேதி இளினாய்ஸ் மாகாணத்திற்கு வரவுள்ளார். அவளை நேரில் காண டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் பொம்மை மாயமானது என்பது வெறும் வதந்தியே என உறுதியாகியுள்ளது. சிலர் இந்த வதந்திகள் டிக்கெட் விற்பனையை அதிகரிக்க கையாளப்பட்ட மார்க்கெட்டிங் திட்டம் எனவும் கருதுகின்றனர்.