தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக – இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாகக் கூட்டணி குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், நாளை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அதிகாரப்பூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த இறுதிப் பட்டியல் தயாராகும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
