மேற்கு வங்க மாநில அரசியலில் 15 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இன்று புதிய சகாப்தம் பிறந்துள்ளது. மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று (மே 9) பதவியேற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களுடன் கடும் பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மம்தாவின் 15 ஆண்டுகால அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்டமாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி, சுவேந்து அதிகாரிக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று (வங்காள நாட்காட்டிப்படி), சுவேந்து அதிகாரி முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுவேந்து அதிகாரி யார் என்று பார்ப்போம்.
மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் மாவட்டத்தின் புர்வா பகுதியில் பிறந்த 56 வயது சுவேந்து அதிகாரி, ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சிசிர் அதிகாரி ஒரு முன்னாள் எம்.பி. ஆவார். தனது தந்தையின் வழியில் காங்கிரஸில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய சுவேந்து, மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது அவருடன் இணைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸில் படிப்படியாக வளர்ந்த சுவேந்து, மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாகத் திகழ்ந்தார். நந்திகிராம் நிலப்போராட்டத்தில் மம்தாவுடன் தோளோடு தோள் நின்று போராடியவர். மம்தா அவருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்து அரசியலில் பெரிய அளவில் வளர்த்துவிட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, திரிணாமுல் நிர்வாகிகள் சிலர் ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ சிக்கியபோது, அதில் சுவேந்து அதிகாரியின் பெயரும் அடிபட்டது. இதன் பிறகு மம்தாவுக்கும் இவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு மம்தாவை விட்டு விலகி பாஜக-வில் இணைந்தார்.
2021 தேர்தலிலேயே நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை நேரடியாக எதிர்கொண்டு அவரை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றார். மம்தா ஆட்சியைப் பிடித்தாலும், அந்தத் தோல்வி அவருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. தற்போது 2026 தேர்தலில், மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் களமிறங்கிய போதும், விடாமல் துரத்திய சுவேந்து அதிகாரி அங்கேயே அவரை வீழ்த்தி, தற்போது மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகவும் மகுடம் சூடியுள்ளார். ‘வளர்த்துவிட்ட மம்தாவையே வீழ்த்திய சிஷ்யன்’ என்ற அடையாளத்துடன் சுவேந்து அதிகாரி இன்று வங்காளத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார்.
