திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ சங்கர் வீட்டின் மேல் பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வ சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த டவுன் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், இசக்கிமுத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதேபோன்று டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூம் வாசலிலும் இதே கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

பின்னர் ஏர்வாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை கொன்று விடுவதாக அரிவாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதனால் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அந்த கும்பல் கேரளாவிற்கு ரயிலில் தப்பி சென்றனர். எனவே தனிப்படை போலீசார் கேரளா திருவனந்தபுரத்திற்கு சென்று அந்த கும்பலை தேடி வந்தனர்.

அப்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் பொன்ராஜ், இசக்கிமுத்து மற்றும் முத்துக்குமார் ஆகிய மூவரும் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் உடனடியாக அந்த விடுதிக்கு சென்று மூவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இந்த சம்பவத்தை செய்ய சொன்னது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.