அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பலமான வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே கௌதமி அந்தத் தொகுதியில் முகாமிட்டு, பல லட்சம் ரூபாயைச் செலவு செய்து, தீவிரப் பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் கௌதமியை நிலைகுலையச் செய்திருக்கிறது. ராஜபாளையம் தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தமமுகவுக்கு (ஜான் பாண்டியன் கட்சி) ஒதுக்கப்பட்டுள்ளது.

​இதனால் அதிர்ச்சியடைந்த கௌதமி, இது குறித்து விளக்கம் கேட்க எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொள்ள முயன்றும், அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். “பாஜகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு வந்ததே இந்த ஒரு சீட்டுக்காகத்தான், இப்போது அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்களே” எனத் தனது நெருங்கிய வட்டாரத்தில் கௌதமி புலம்பி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

ராஜபாளையத்தில் ஜான் பாண்டியன் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், பல கோடி மதிப்பிலான சொத்து விவகாரங்களில் ஏற்கனவே பாஜக ஆதரவு கிடைக்காமல் தவித்த கௌதமிக்கு, இப்போது அரசியலிலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இப்போது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.