தந்தையின் அன்பு பல சமயங்களில் வார்த்தைகளால் வெளிப்படுவதில்லை; அது அவரது செயல்களின் மூலமே வெளிப்படும். தனது பயம், வலி மற்றும் உயிரைப் பற்றி கவலைப்படாமல், தன் குழந்தைகள் மீது எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இறுதி வரை போராடும் குணம் கொண்டதுதான் தந்தை. இந்த உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் வகையில், மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கொட்டும் மழை, சுற்றிலும் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர் மற்றும் மரண பயம் சூழ்ந்த அத்தகைய கோரமான சூழ்நிலையில், உதவிக்கு யாருமில்லாதபோது தன் உயிரைப் பணையம் வைத்து தன் குழந்தைகளைக் காப்பாற்றும் ஒரு தந்தையின் போராட்டம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

வைரலாகும் இந்தக் காணொளியில், வெள்ளநீரில் கழுத்தளவுக்கு நின்றுகொண்டு ஒரு தந்தை தனது மூன்று சிறு குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப் போராடுவதைக் காண முடிகிறது. அவரிடம் படகோ அல்லது வேறு முறையான உதவிகளோ இல்லாததால், அவர் ஒரு பெரிய வட்டமான பாத்திரத்தை பயன்படுத்தியுள்ளார். அதில் தனது மூன்று குழந்தைகளையும் அமரவைத்துவிட்டு, தாமே கழுத்தளவுக்கு மேல் எழும் வெள்ளநீரில் இறங்கி குழந்தைகளைத் தள்ளிச் செல்கிறார். தண்ணீரின் ஆழம் காரணமாக அந்த நபர் மூழ்கிவிடுவாரோ என்ற அச்சத்தை அந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது. தன் குழந்தைகளைக் காப்பாற்ற அந்தத் தந்தை படும்பாடு நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

 

அந்தச் இக்கட்டான தருணத்திலும், குழந்தைகள் பயந்திருந்தாலும் தங்கள் தந்தையின் மீது அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அதில் வெளிப்படுகிறது. அந்தத் தொட்டியில் குழந்தைகள் அமைதியாக அமர்ந்திருக்க, அந்தத் தந்தை தனது உடல் சோர்வையும் உயிருக்கு ஏற்படும் அபாயத்தையும் துளியும் பொருட்படுத்தாமல் தனது முழு பலத்தையும் திரட்டி வெள்ளநீரைக் கடந்து செல்கிறார். இந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்ட இணையவாசிகள் அந்தத் தந்தையின் எல்லையற்ற தைரியத்திற்கும் தியாகத்திற்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். “உலகில் தந்தையை விடப் பெரிய பாதுகாவலர் யாருமில்லை”, “வசதிகளோ பணமோ இல்லாவிட்டாலும், தந்தை தன் குழந்தைகளை எப்போது கைவிடுவதில்லை என்று நெட்டிசன்கள் தங்களது உணர்ச்சிகரமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வீடியோ அசாம் மாநிலத்தின் வெள்ளப்பெருக்கைச் சேர்ந்தது என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டாலும், இதன் உண்மைத்தன்மை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. இருப்பினும், வீடியோவில் பதிவாகியுள்ள இடத்தின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் தன் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு தந்தையின் தியாகம் அனைவரின் மனதையும் ஆழமாகத் தொட்டுச் செல்கிறது.