திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வின் தற்போதைய நிலையை நினைத்து ஆவேசமாகப் பேசினார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு நிழலாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாரும் சேர்ந்து குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இவர்களது சுயநல அரசியலால் தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் வீணடிக்கப்படுவதாகவும், கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகவும் கூறி அதிரடி காட்டினார். குறிப்பாக, தென் மாவட்டங்களில் எடப்பாடியின் வலதுகரமாகச் செயல்படும் ஆர்.பி.உதயகுமாரையும் இதில் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
”பதவிக்காக எதையும் செய்யும் இந்தச் சுயநலக் கூட்டத்திடம் இருந்து கட்சியை மீட்கும் வரை என் போராட்டம் ஓயாது” என்ற தொனியில் ஓபிஎஸ் ஆவேசமாக முழங்கினார். ஆர்.பி.உதயகுமாரின் செல்வாக்கைத் தென் மாவட்டங்களில் சிதைக்கும் நோக்கில் ஓபிஎஸ் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், வரும் தேர்தலில் அதிமுக-விற்குப் பெரும் சவாலாக அமையும் எனப் பார்க்கப்படுகிறது. திமுக மேடையில் நின்றுகொண்டு அதிமுக-வின் முக்கியப் புள்ளிகளை ஓபிஎஸ் அக்குவேறாகப் பிரித்து மேய்ந்தது, தமிழக அரசியலில் இன்று ஹாட் டாப்பிக் ஆகிவிட்டது!
