கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது மாணவியின் தாயார் கொடுத்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மாணவியின் தாயார் சிபிசிஐடி போலீசார் நியாயமான முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும் இன்னும் கொலைக் குற்றசாட்டின் கீழ் வழக்கு பதியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் மறைத்து விட்டதாகவும், சம்பவம் நடந்த இடம் மற்றும் ஆதாரங்களின் தடயம் போன்றவைகள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனு விசாரணையின் போது மாணவி பயன்படுத்திய செல்போன் தடவியல் ஆய்வு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறுதியாக தாக்கல் செய்வதற்கு 4 வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவோடு தாயார் தாக்கல் செய்த மனுவையும் நிலுவையில் வைத்துள்ளனர்.