புனேவின் பிப்வேவாடி பகுதியில் நடக்கின்ற ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 36 வயதான தாயும், 24 வயதான காதலனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 14 வயதான சிறுமி தனது தாயை எதிர்த்து புகார் அளித்திருந்தார். எட்டாவது வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, தாய் தன்னை குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் வீடியோ எடுத்து, அதை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்ததோடு சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறியிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் தாயாரின் காதலனும் தொடர்புடையவராக இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறை தகவலின்படி, தாயார் தனது காதலனைப் பற்றிய தகவலை மகள் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்ததை அறிந்து, அந்த உறவை வெளியே தெரியவந்துவிடும் என்ற பயத்தில், தனது மகளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்களைத் திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது. வீடியோக்களை அவரது காதலனின் உதவியுடன் பரப்பியதற்காக அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், சிறுமியின் மாமி அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டு தகவல் அளித்த பிறகுதான் சிறுமிக்கு அதைப்பற்றி தெரிய வந்தது. அதன் பிறகு சிறுமி போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோக்கள் எங்கு எப்போது பதிவேற்றப்பட்டன என்பதை விரிவாக விசாரித்தனர். அந்த சிறுமியின் தாயாரும், அவரின் கணவரும் கூலி தொழிலாளிகள். கள்ளக்காதலனும் நாளுக்கு சம்பளம் பெறும் தொழிலாளியாவார்.

வழக்கு பதியப்பட்டதும் குற்றவாளி தாயார் புனேவிலிருந்து தப்பிச் சென்றார். பிப்வேவாடி போலீசார் கடந்த மூன்று மாதமாக சோலாபூர், தராஷிவ், சத்திரபதி சம்பாஜிநகர், அகில்யாநகர் மற்றும் தௌண்ட் மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை, அவர்கள் காடக்வாஸ்லா பகுதியில் ஒரு சிறிய ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்ற தகவல் கிடைத்தது. ஞாயிறன்று மாலை காடக்வாஸ்லா அணைக்கட்டு அருகே இருவரும் கைது செய்யப்பட்டனர். தாயாரின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.