சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில், காதலியைக் கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்து, பின்னர் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம்  கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது மகள் கோகிலா (23), ஒரு பட்டதாரிப் பெண். இவருக்கும், பக்கத்து ஊரை  சேர்ந்த அம்மாசி (26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியது.

இந்தச் சூழலில், கோகிலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதற்குக் காரணமானவர் அம்மாசிதான் என்று கோகிலாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கோகிலாவை அம்மாசியுடன் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் பேசி அனுப்பிய பிறகு, கோகிலாவுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அம்மாசி. ஆனால், வீட்டிற்குச் சென்றதும் அவரது சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. “திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை வெளியில் சொல்லி என்னை ஊருக்குள் அசிங்கப்படுத்தி விட்டாய்” என்று கோகிலாவிடம் கூறி அம்மாசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அம்மாசி, கோகிலாவைத் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி மயங்கி விழுந்த கோகிலாவை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவைக் கொண்டே கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

தனது கொடூரச் செயலை மறைப்பதற்காக, கோகிலாவின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர், அப்பகுதியில் இருந்த  கிணற்றுக்குள் அந்த மூட்டையை வீசிவிட்டு, கோகிலா திடீரெனக் காணாமல் போய்விட்டார் என்று ஊராரிடம் நாடகமாடியுள்ளார்.

இதற்கிடையில் கோகிலாவின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிணற்றுக்குள் கிடப்பதாகக் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் தொடக்கமாகச் சந்தேகத்தின் பேரில் அம்மாசியைப் பிடித்து விசாரித்தபோது, அவர் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அம்மாசி மீது கொலை வழக்குப்பதிவு செய்த  போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். காதலித்து கரம் பிடிப்பதாக நம்பவைத்து ஏமாற்றி கர்ப்பிணியைக் கொன்று கிணற்றில் வீசிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.