தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெருந்தரக்குடியில் இயற்கை எரிவாயு கிணறை தோன்றி எடுக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தோம். ஆனால் தற்போது நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் காரணமாக தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் எந்த ஒரு அனுமதியும் மாவட்ட நிர்வாகம் வழங்காது  என கலெக்டர் கூறியுள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் 21 ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டத்தினை ஒத்தி வைத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.