கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், சுமார் 7 மணி நேரம் விளக்கமளித்தார். இந்நிலையில், அடுத்த வாரம் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த த.வெ.க. தலைவர் விஜய், நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். காலை தொடங்கி சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணை முடிந்து அவர் இன்று சென்னை திரும்பினார்.

இந்த விவகாரம் மற்றும் விசாரணை குறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: “சி.பி.ஐ. விசாரணைக்குத் தலைவர் விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் அவர் அளித்துள்ளார். விசாரணை இன்னும் நிறைவடையாததால், அடுத்த வாரம் அவர் மீண்டும் ஆஜராக உள்ளார். எனினும், குறிப்பிட்ட தேதி இன்னும் முடிவாகவில்லை.”

விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்துப் பேசிய அவர், “விசாரணை குறித்த முழுத் தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது முறையாக இருக்காது; அது விசாரணை மாண்பைச் சிதைக்கும் செயல்” என்றார். மேலும், ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அது குறித்துத் தற்போது கருத்து கூற இயலாது என்றும்  கூறினார்.

நிர்மல் குமார் தொடர்ந்து பேசுகையில், “கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை கூட்டணி விவகாரத்தில் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.