கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கோவை பீளமேட்டில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் மூலம் கடல் சில நாட்களுக்கு முன்பு பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக்தி தங்கவேல் என்பவர் அறிமுகமானார். நாங்கள் இருவரும் காதலித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தோம். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி சக்தி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காய்ச்சல் அடிப்பதாகவும், வந்து உதவி செய்யுமாறும் அழைத்தார்.

அதனை நம்பி நான் சென்றபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் இரண்டு மாத கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் கூறியபோது கருவை கலைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அதன் பிறகு என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்தி தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.