வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மண்டபத்திற்கு வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்ற பாணியில் அதிரடியாகச் செயல்பட்டனர். தங்களைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை (Barricades) ஆவேசமாக அடித்து நொறுக்கிவிட்டு, அவர்கள் அரங்கிற்குள் புகுந்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

​தலைவர் விஜய்யை ஒருமுறை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்திலும், ஆர்வத்திலும் தொண்டர்கள் முண்டியடித்ததால் காவல்துறையினரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தகர்த்தெறிந்து கொண்டு தொண்டர்கள் கூட்டமாக உள்ளே நுழைந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டாலும், தளபதி மீது அவர்கள் வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தையே இது காட்டுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.