
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகே உள்ள தொரப்பாடி பகுதியில், கந்து வட்டி வசூலிக்கச் சென்ற இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் (45) மற்றும் ராஜ்குமார் (36) ஆகிய இருவரும், ஒரு விதவைப் பெண்ணிடம் கடன் கொடுத்து, அதை வசூலிக்கப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்பொழுது வீட்டில் தனியாக இருந்த அந்த விதவையின் மகளிடம் இருவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு முயன்றனர். மேலும், மாணவியை மிரட்டி, இது குறித்து வெளியில் கூறக்கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது. சிறுமி தைரியமாக இந்த சம்பவத்தை தனது உறவினர்களிடம் பகிர்ந்துள்ளார்.
உறவினர்கள் உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல்துறை உதவியுடன், குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொரப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.