
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற சென்றுள்ளார். கடந்த 27-ஆம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில் 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்போது கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக வேலை பார்க்கும் ராமலிங்கம் என்பவர் 17,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் அந்த பணத்தை கணக்காளரான ஏகாம்பரத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து சிவகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சிவக்குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமலிங்கம் மற்றும் ஏகாம்பரத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.