தமிழகத்தில் தற்பொழுது ஆங்காங்கே நிலவி வரும் மின்தடைப் பிரச்சினைக்குக் கடந்த கால ஆட்சியில் நடந்த முறைகேடுகளும், அலட்சியங்களுமே முக்கியக் காரணம் என்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் மிக ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளது அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மதுரை மேலூரில் மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்தத் தவெக கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், கடந்த ஆட்சிக் காலத்தில் மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) போன்ற அத்தியாவசிய மின்சார உபகரணங்கள் புதியதாக எதுவும் வாங்கப்படவே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் பழமையான உபகரணங்களை வைத்தே தொடர்ந்து மின்சார விநியோகம் செய்யப்பட்டு வந்ததால், தற்பொழுது அந்தப் பழைய மின் சாதனங்கள் அனைத்தும் தங்களின் முழுச் சக்தியையும் இழந்து (சக்தி இழப்பு) செயலிழந்து போவதாகவும், இதன் காரணமாகவே ஆங்காங்கே திடீர் மின் தடை ஏற்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
முந்தைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் மின்சாரக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்துள்ள இந்த அதிரடிக் குற்றச்சாட்டு தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி வருகிறது.
