இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்களது பதக்கங்களை வீசும் முடிவை ஒத்திவைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இத்தகவல் அறிந்ததும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாத் அங்கு சென்று மல்யுத்த வீரர்களிடம் பேசி பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.

மேலும் அதன்பின் மத்திய அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார். அதோடு மல்யுத்த வீரர்களிடம் இருந்து விருதுகள் மற்றும் பதக்கங்கள் அடங்கிய மூட்டையை பெற்றுக்கொண்ட நரேஷ் திகாத், இவற்றை ஜனாதிபதியிடம் கொடுப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் அனைவரும் ஹரித்துவாரிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.