சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனித மன உறுதியின் வலிமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அந்த வீடியோவில், இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு டயர் கடையில் கடின உழைப்பில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களே செய்யத் தயங்கும் கனமான டயர்களைத் தூக்கும் வேலையை, அவர் எவ்வித புகாரும் இன்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் செய்கிறார்.

இந்நிலையில் தனது சக்கர நாற்காலியை ஒரு கையால் நகர்த்திக் கொண்டே, ஒரே நேரத்தில் மூன்று கனமான டயர்களை இழுத்துச் செல்லும் அவரது வேகம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பயனர், “உங்களால் ஏன் வேலை செய்ய முடியாது என்பதற்கு இப்போது காரணம் சொல்லுங்கள்” என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

“>

மேலும் “முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்பதற்கு இந்த மனிதர் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். வாழ்க்கையில் சிறு தோல்விகளைக் கண்டு துவண்டு போபவர்களுக்கும், ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி வேலையைத் தவிர்ப்பவர்களுக்கும் இக்காட்சி ஒரு சாட்டையடியாக அமைந்துள்ளது. வலிகளைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் இவரின் தன்னம்பிக்கை, இணையவாசிகள் பலரையும் கண்கலங்கச் செய்ததோடு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.