
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள் தங்கை இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற இருந்தது. அதன்படி மணமகள்களின் வீட்டில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டது. திருமணம் நடைபெற இருந்ததை முன்னிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு கூடினார். இந்நிலையில் மணமகள்கள் இருவரும் அலங்காரம் செய்து கொள்வதற்காக பியூட்டி பார்லருக்கு காரில் உறவினர்களுடன் சென்றனர். அவர்கள் அலங்காரத்தை முடித்துவிட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பிய நிலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு பைக் மீது கார் லேசாக உரசியது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்த மூன்று வாலிபர்களும் கீழே விழுந்த நிலையில் அவர்கள் கோபத்தில் காரில் வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மணமகள்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து அடித்தனர். அதோடு மணமகள்களின் முகத்தில் சேற்றை அள்ளி வீசினர். இது பற்றி தெரிந்ததும் மணமகளின் குடும்பத்தினர் அங்கு வந்து வாலிபர்களை சுற்றி வளைத்தனர். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று பெரும் கலவரம் செய்ததோடு அங்கிருந்த கார்களை அடித்து உடைத்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களையும் தாக்கினர்.
இதில் மணமகள்களின் தந்தை உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக மணமகன்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அங்கு வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் மணமகன்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இதனால் ஒரே நாளில் நடைபெறவிருந்த அக்காள் தங்கை திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.