தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமான ‘ஒரே ஒரு ஓட்டு’ வித்தியாசத்தில் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், தபால் வாக்குகள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை TVK வேட்பாளர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் குறித்து எழுந்த புகார் மீது தேர்தல் ஆணையம் ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மஸ்கட்டில் இருந்து வந்து ஓட்டு போட்ட ஒரு நபரால் தான் இந்த ஒரு ஓட்டு வித்தியாசம் வந்ததாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
