
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு ‘டார்க் ஸ்டூடியோ’ தயாரித்த ஆவணப்படம், 2024-ல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதில், நயன்தாரா நடித்த பழைய படங்களிலிருந்து பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, ‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து அனுமதியின்றி காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் தனுஷின் ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தற்போது ‘சந்திரமுகி’ படத்திலிருந்து சில காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி, அந்த படத்தின் பதிப்புரிமை கொண்ட ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரியும், டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இரு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். ஒரே ஆவணப்படம் தொடர்பாக ஏற்கனவே தனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருப்பதால், நயன்தாரா தரப்பில் தற்காலிகமாக சட்ட சிக்கல்கள் அதிகரித்துள்ளன.