மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷின் மனைவி ரிங்கு மஜும்தாரின் மகன் ஸ்ரீஞ்சோய் தாஸ்குப்தா (25) செவ்வாய்க்கிழமை நியூடவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு பின்னர் உயிரிழந்தார். தொழில் ரீதியாக ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், வீட்டிலேயே தனது நண்பர்களுடன் இரவு விருந்தில் ஈடுபட்டிருந்த நிலையில், விருந்துக்குப் பிறகு சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. உடனே பிதான்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மரணம் நிகழ்ந்த பின், சம்பவ இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், அவரது உடலுக்கு அருகில் மருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பது உறுதியாக தெரியவில்லை . பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் R.G. கர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது யாராவது சூழ்ச்சி செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷ்ரின்ஜயின் நண்பர்கள் யார் யார் விருந்தில் கலந்து கொண்டனர் என்ற விவரங்கள் தற்போது போலீசார் மூலம் திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 18 அன்று திலீப் கோஷுடன் திருமணம் செய்து கொண்ட தனது தாயார் ரிங்கு மஜும்தாரின் திருமண விழாவில் ஸ்ரீஞ்சோய் பங்கேற்கவில்லை. அவர் அந்த நாளில் தனது நண்பர்களுடன் நகரத்திற்கு வெளியே சென்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருந்தாலும், தனது தாயின் புதிய வாழ்க்கைக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக அவர் கூறியதாகவும், திலீப் கோஷுடன் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாகவும் அவர் சுற்றியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது பின்னணி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிய, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.