திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி, கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தொடர்பான சமீபத்திய விவகாரங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
“நம்ம சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகும் மாதிரி, செங்கோட்டையன் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அவரைச் சுற்றி வெளியான செய்திகளைப் பார்த்தாலே மகிழ்ச்சி என்றாலும், உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” “செங்கோட்டையன், போலியான போடிங் பாஸ் கொண்டு டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு நிதி அமைச்சரை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பழைய நிதி அமைச்சருடன் எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி பரபரப்பாக பேசபட்டதால், சந்தேகங்கள் எழுகின்றன,” என்றார் புகழேந்தி. செங்கோட்டையன், பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்ததாகவும், ‘கட்சி கட்டுப்பாடு முக்கியம்’ எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அம்மா (ஜெயலலிதா) படங்களை தவிர்த்ததால்தான் இந்த பிரச்சனை உருவாயிற்று,” என புகழேந்தி தெரிவித்தார்.
மேலும் “ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் செங்கோட்டையன். பழனிசாமி பின்னால் நடக்க மாட்டார், ஓடிப்போவார். இப்போது, ஒற்றுமை, கட்சி கட்டுப்பாடு என்று பத்திரிகை சந்திப்பில் பேசவிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இது போன்ற பேச்சுகள் பொதுமக்களிடம் மரியாதையை இழக்கும்.” “7 முறை கோபி செட்டி பாளையத்தில் வெற்றி பெற்றவர் பழனிசாமியை தலைவனாக ஏற்கிறார் என்றால், அவருடைய ஆதரவாளர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். தலைவர்கள் மற்றும் அம்மாவை அவமதிப்பவர்களை ஒட்டுமொத்தமாக கண்டிக்க வேண்டும். செங்கோட்டையன் அதைச் செய்யவில்லை என்றால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றார் புகழேந்தி.
